Saturday, July 5, 2008

இரு கவிதைகள்



சிலாகிக்க எதுவுமற்ற வாழ்வு

1
இளமையின் துடிப்பில் கழிந்த நாட்கள் அவை.
எல்லாமே சாதாரணமாகத் தெரிந்தது.
வெட்டுதல்வீழ்த்துதல், எல்லாமே
பின்னர் எல்லாமே புரிந்தது
காலம் மெல்ல மெல்ல நகர்ந்த போது.
வெட்டிப் பேச்சைத் தவிர எதுமே இலகுவானதல்லவென்று

2
குன்றும் குழியுமாக கிடக்கும்
அந்த தார் வீதியில்
எத்தனை நாட்கள் நடந்திருப்பேன்
எந்த கனவுகளுமற்று.
வாய்கடுக்க கதைத்து அலுத்த, அந்த நாட்களை
இப்போது நினைக்கக் கூட முடிவதில்லை
பின்வீட்டு தம்பியன், பக்கத்து வீட்டு ஜியாப்தீன், குட்டி
எல்லோருமாய் கூடி அளவளாவிய நாட்கள்தான் எத்தனை.

3
எல்லாமும் மாறிவிட்டது
எனது கிராமம் மட்டுமல்ல நானும்தான்
வெறும் ஞாபகங்களாக மட்டுமே கிடக்கும்
அந்த நினைவுகள்,
ஒரு மழை பெய்யும் போதும்
ஏதோவொரு இனம்புரியா புத்துணர்ச்சி
என்னை நனைக்கும் போதும்
மெல்லிதாக உரசித்தான் செல்கின்றன.

4
சதா சமரசங்களுடன் கழியும் வாழ்வு
கொள்கையே வாழ்வாக வாய்க்காதா? என்ற ஏக்கம்
இவற்றுக்கு மத்தியில் சிலாகித்துச் சொல்ல
என்னதான் இருக்கிறது வாழ்வில்.


உனது இரத்தத்தின் நிறம் என்ன

1
எல்லாமும் கேட்டாகிவிட்டது
சாதிகள் இல்லையடி பாப்பா
சாதிகள் இரண்டொழிய வேறில்லை
சாதித் தமிழன் ஒரு பாதித் தமிழன்
சமத்துவ பூமி கான்போம்
மார்க்சியம் நம்மை விடுவிக்கும்
தேசியம் எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கும்
எல்லாமும் கேட்டாகிவிட்டது.

2
இப்பொழுதும் திருமணம் என்றவுடன்
எழும் முதல் கேள்வி.
அவங்கள் என்ன ஆக்களாம்
எத்தனை மார்க்ஸ் வந்தென்ன
எத்தனை பெரியார் வந்தென்ன
அவர்களால் என்ன செய்ய முடியும்
நாம் இரத்தத்தின் நிறம் தெரியாவர்களாக இருக்கும்போது.

3
ஆரியன், வெள்ளாளன், பறையன், பள்ளன், நளவன்
இன்னும் எத்தனையோ சொல்வோம்.
எல்லா தத்துவங்களும் தோற்றுப் போன
இடத்திலிருந்து ஒன்றை கோட்போம்.
இதில் உங்கள் இரத்தத்தின் நிறம் சிகப்பல்ல
என்பவர்கள்முன்னுக்கு வாருங்கள்.
நமக்கானதொரு புதிய தத்துவம் காத்துக் கிடக்கின்றது.