Monday, June 23, 2008

அரிப்பை தாங்க முடியவில்லை அதனால் சொறிந்து கொள்கிறேன்.

1

இப்பொழுதெல்லாம் இணையத்திற்குள் நுழையத் தெரியாதவர்கள் பாடு அதோ கெதிதான் என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் இணையத்திற்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள உறவை பார்த்தால், அது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாக தெரிகின்றது. நாம் என்னதான் கோளமய உலகம் (புடழடியடளைந றழசடன ), உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், சாமாணிய மக்களின் வாழ்க்கை என்னவோ அப்படியேதான் இருக்கின்றது. உலகத்தின் சுருக்கம் சாதாரண ஏழை மக்களின் வாழ்க்கை எல்லையை விரிக்க வில்லை. மாறாக மேலும் சுருக்கி வருகிறது. இந்த நிலைமை பணம் படைத்தவர்கள் மேலும் பணக்காரர்களாக ஏழைகளோ மேலும் கடைக் கோடி நிலையை நோக்கி சரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த லட்சனத்தில் நாம் இணையத்திற்குள் புகுந்து கொள்வது எவ்வாறு எழுத்தின் நோக்கத்தை நிறைவு செய்ய உதவப் போகின்றது? எங்களுடைய ஆவேசமான சொற் கணைகள் எவ்வாறு விடுதலை வேண்டி நிற்கும் மக்களைச் சென்றடையப் போகிறது?

2

வலைப்பதிவொன்றை உருவாக்கிக் கொள்ள எத்தணித்தபோது இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்தன? நான் வலைப்பதிவில் எழுதி என்ன நடக்கப்போகின்றது எத்தனைபேரை அது சென்றடையப் போகின்றது? ஏனென்றால் நானோ சாதாரண மக்களை நோக்கி எழுதி வரும் ஒருவன். பல வருடங்களாக ஈழத் தமிழர் அரசியல் சார்ந்து உரையாடி வருகிறேன். எனது பிரதான ஈடுபாடு தமிழர் தேசியம், மற்றும் புதிய மார்க்சியம் என்பன ஆகும். இப்படிப்பட்ட நான் வ.பதிவிவு என்ற பெயரில் என்னை சுருக்கிக் கொள்வது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? சரி அவ்வப்போது எழுதித்தான் பார்ப்போமே! என்ன வந்துவிடப் போகின்றது. அரிப்பெடுத்தால் நாம் சொறிந்து கொள்வதில்லையா அப்படி இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும். இந்த பத்தியில் நான் எழுத எடுத்துக் கொண்ட விடயம் ‘ஈழத்தில் தலித்தியம்’ என்பதாகும்.


நான் சமீப காலமாக இந்த உரையாடலை அவதானித்து வருகின்றேன். அதிலும் குறிப்பாக இவ்வாறான வலைப்பதிவுகளில் இவற்றை அதிகம் பார்க்க முடிகின்றது. ஈழத் தமிழர் தேசியம் தலித்துக்களை புறிக்கணிக்கின்றது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் தலித்துக்களுக்கு விடுதலையைக் கொண்டு வரப்போவதில்லை என்றெல்லாம் பலர் கருத்துக்கள் என்ற பேரில் அவதிப்படுகின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நான் எனக்குள் சொல்லிக் கொள்வேன் அட மடப் பயல்களே ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் இன்னும் ஈழத் தமிழர்களுக்கே விடுதலையைக் கொண்டுவர வில்லை பின்னர் எங்கு தலித்துக்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போகிறது.


3

நன்பர்களே! ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம். அதன் இலக்கு சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிப்பது அதாவது தமிழர்களுக்கென்று ஒரு சுயாதீனமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். முதலில் அது நிகழ்ந்து முடியட்டும் பின்னர் அதில் இடம்பெற வேண்டிய அகநிலை மாற்றங்கள் குறித்து நாம் பேசலாம். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் நம்மில் பலருக்கு தலை எது கால் எது என்று விளங்குவதில்லை. தம்மை புத்திஜீவிகளாக காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்தில், இவர்கள் தலையை கால் என்பார்கள் காலை, தலை என்பார்கள். இவர்களது தேவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே ஒழிய பிரச்சனைகளை புறச் சூழல் நிலமைகளுக்கு ஏற்ப அலசி ஆராய்வதல்ல. எல்லோருக்கும் தாங்கள் தங்கிக் கொள்வதற்கு வசியான தரிப்பிடங்கள் தேவைப்படுகின்றன.


ஈழத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர், தமிழர் தேசியம் தலித்துக்களுக்கு விமோசனத்தைக் கொடுக்கப் போவதில்லை என்ற வாதங்களை சொல்லி வருபவர்களெல்லாம் ஒரு வகையான அடையாள விரும்பிகள்தான். இவர்களது கருத்துக்களில் ஒரு அடிப்படையான நேர்மை இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் தலித்தியம் என்பது வசதியாக கருதி ஒழிந்து கொள்வதற்கான ஒரு கூடாரமேயன்றி வேறொன்றுமில்லை. தங்களை எழுத்தாளர்களாகவும், புலிகளை விட நாங்களே முற்போக்காளர்கள் என்று பீற்றிக் கொள்வதற்கும் இவர்களுக்கு தலித்தியம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களது கடந்த கால அனுபவங்களை சிரமப்பட்டு நினைவுக் குறிப்புக்களாக எழுதி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நினைவு கொள்கின்றனர். உண்மையில் இவர்களது பிரச்சனை தங்களது அனுபவங்களை சொல்லுவதன் மூலம் தங்களை இன்றைய தலைமுறைக்குள்ளும் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களிடம் இருப்பது வெறுமனே அடையாள விருப்பு நிலை மட்டுமே. ஆழமாக பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளே இவர்கள்தான் ஏனென்றால் இவர்கள் கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்பவர்களின் பெயர் முற்போக்காளர்களோ அல்லது விடுதலை விரும்பிகளோ அல்ல. அவர்கள் பழமையின் ரசிகர்கள். இன்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை அன்றுபோல் அப்படியேதான் இருக்கின்றது என்பவர்களும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் ஏற்பட்ட உடைவுகளை சுட்டிக்காட்ட தயங்குபவர்களும் சாதி என்னும் அழிந்து போக வேண்டிய பழமையின் ரசிகர்களே அன்றி அதன் மறுப்பாளர்கள் அல்ல என்பதே எனது நிர்திடமான வாதம்.


4

அதற்காக நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது, தலித்தியம் என்று சொல்லப்படுவதையோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான பிரச்சனைகளையோ நான் மறுப்பதாக. ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அது முன்னைய இறுக்கத்துடன் இருக்கிறது என்று வாதிடுவது சுத்த பம்மாத்து என்பதுதான் எனது துனிபு. இப்படியான பம்மாத்துக்களின் தோற்றுவாயை பார்ப்போமானால். தமிழக தலித்திய ஆய்வுகளையும், அங்குள்ள சாதி அரசியல் அனுபவங்களையும் அருச்சுவடிகளாக கொண்டு ஈழத்து அரசியலுக்கு விளக்கம் சொல்ல முற்படும் பொழுதுதான் இந்த பிரச்சனை எழுகிறது. தமிழக தலித்திய அரசியல் என்பது எந்தவகையிலும் ஈழத்து அனுபவங்களுடன் பொருந்திப் போக முடியாது. அது வேறு இது வேறு.


ஆனால் அதனை வலிந்து பொருத்த சிலர் மேற்கொண்ட தந்திரோபாயம்தான் ஈழத்து எழுத்தாளர் டாணியலை தமிழக தலித்தியத்தின் முன்னோடி என்று அழைத்துக் கொண்டமையாகும். டாணியல் ஒருபோதும் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அழைத்துக் கொண்டவர் அல்லர். டாணியல் தன்னை இடதுசாரி என்றே அழைத்துக் கொண்டார். ஆனால் டாணியலின் பிரதான கருத்து நிலை யாழ்ப்பாண சாதிய மரபிற்கு எதிரானதாக இருந்தது. அன்றைய சூழலில் அது முற்றிலும் சரியானதுதான். இதற்கு டாணியல் சார்ந்திருந்த சீனசார்பு இடதுசாரி கட்சியின் தீண்டாமை ஒழிப்பு நிலைப்பாடும், டாணியலின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணங்களாக இருந்தன. அதற்காக அது எல்லா காலத்திற்கும் சரியாகத்தான் இருக்குமென்று வாதிடுவது அறிவுடமையன்று. ஆனாலும் டாணியலிடம் ஒரு அடிப்படை நேர்மை இருந்தது, டாணியல் தன்னையொரு தாழ்த்தப்பட்டவர் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டார் குறிப்பாக தன்னை வண்ணான் என்று பகிரங்கமாக குறிப்பிட்டார். இன்று தலித்தியம் பேசும் எத்தனை பேரிடம் அந்த நேர்மை இருக்கிறது. இன்று தலித்திய எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் எத்தனை பேரால் நான் ஒரு பறையன், நான் ஒரு பள்ளன், நான் ஒரு நளவன் என்று பகிரங்கமாக மேடைகளில் சொல்ல முடியும்? இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


இன்னும் பல விடயங்கள் பற்றியும் நான் தொடர்ந்து பேசுவேன். நமது உரையாடல் சூழலால் எனக்கு அரிப்பெடுக்கும் போதெல்லாம் நான் சொறிந்து கொள்ள தயங்க மாட்டேன்.
‘’’

1 comment:

sukan said...

நல்லதொரு முயற்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் அடிப்படை சிந்தனை யதார்த்தபூர்வமாக உள்ளது. புத்தியீவித்தனம் மற்றும் அதனூடாக சமூக அடயாளத்தை வெளிப்படுத்துதல் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் உண்மையான செயற்பாட்டு ரீதியான சமூக விடுதலைக்கு உழைப்பவருக்கும் உள்ள வித்தியாசங்கள், இனம் காணும் நடவடிக்கைகள் என்பவற்றில் நாம் பின்தள்ளப்பட்டுள்ளோம். என்றுமே குழப்பமான ஒரு சூழலை இது தோற்றுவிக்கின்றது. இந்த குழப்பத்தின் தெளிவே முதலில் ஒரு சமூக விடுதலை நோக்கிய பாதையை இனம் காட்டும் அதன் பின்னே தான் அந்த பாதையில் பயணிக்க முடியும்.

உங்கள் கருத்தில் இந்த புதிய மார்க்சியம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. எமது சமூக பிரச்சனைக்களுக்கான தீர்வும் அது சார்ந்து சித்தாந்த கோட்பாடுகளும் எம்மில் இருந்தே உருவாக வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. மற்றபடி உங்கள் கருத்துக்களை படித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.